மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மகளிர் கூட்டமைப்பினரை காணொலி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார். அப்போது, “கோவிட்-19 பெருந்தொற்று கொடுத்த வெறுப்பு காரணமாக சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியா ஈர்க்க இது நல்ல தருணம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாட்டு முதலீடுகளை ஏற்கும் வண்ணம் இந்தியாவில் தொழில் செய்ய முன்வரும் நிறுவனங்கள் வரவேற்கப்படும் என்றும், அவைகளுக்கு தேவையான அனைத்து வசதிகள், ஒப்புதல்கள் மற்றும் உரிமங்கள் விரைவில் கிடைக்க வழிசெய்யப்படும்” என்றும் அவர் கூறினார்.
மேலும், “கோவிட் -19 வைரஸ் காரணமாக சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் உலகளாவிய வணிகங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்திய தொழில்நுட்ப மேம்பாடு, விதிகளில் தளர்வு, அனுமதி உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
இது மட்டுமின்றி இந்தாண்டு இறுதிக்குள் 25 லட்சம் குறு, சிறு நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும்” என்றும் கட்கரி கூறினார். இந்த நடவடிக்கையை ஊக்குவிக்கும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி கடன் திட்டங்களை மறுசீரமைப்பதை 2020 மார்ச் 31 காலக்கெடுவிருந்து 2020 டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களின் முதலீடுகளை தங்கள் நாட்டின் பக்கம் திருப்பும் வண்ணம் ஏற்கனவே ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஜப்பான் சில சலுகைகளையும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நிதின் கட்கரி, சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவின் பக்கம் ஈர்ப்பது இந்திய தொழில் மற்றும் தொழில்முனைவோருக்கு ஒரு “பொன்னான வாய்ப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'அன்று வெள்ளம், இன்று கரோனா'- 112 ஆண்டுக்கு பின் ரம்ஜான் பாதிப்பு!