கடந்த சில நாட்களில் இந்தியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உகாண்டாவில் வெட்டுக்கிளிகளின் நடமாட்டங்கள் அதிகமாக உள்ளன.
இந்த வெட்டுக்கிளிகள் மழைக்காலத்திற்கு முன்னதாக வசந்த கால இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளில் திரள் திரளாக உருவாகி, கிழக்கு-இந்தோ-பாகிஸ்தான் எல்லைக்கு குடிபெயர்கிறது என்று உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் வெட்டுக்கிளிகளின் திரள் பிகார் மற்றும் ஒடிசா வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தென்னிந்தியாவுக்கு புலம்பெயர்ந்த பூச்சிகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
கரோனா ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் நாட்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, இந்தியாவின் வடமேற்கு மாநில விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது.
இப்போது வடமாநிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வெட்டுக்கிளிகள், நம் பகுதிகளில் சாதாரணமாகக் காணும் வெட்டுக்கிளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள் தான். இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்க்கைமுறை மிகவும் விசித்திரமானது.
பொதுவாக, தனித்தனியாக (solitary phase) குறைந்த எண்ணிக்கையில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள் ஆபத்தானவை அல்ல. வறட்சி ஏற்படும் காலகட்டங்களில் ஆங்காங்கே உதிரிகளாய் இருக்கும் இவை, பசுமையான சிறிய நிலப்பரப்புகளுக்கு உணவுக்காக வந்து சேர்கின்றன.
பல வெட்டுக்கிளிகள் ஒரே இடத்தில் நெருங்கி உணவு தேட நேரும்போது, அவற்றின் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, செரட்டோனின் (serotonin) என்னும் வேதிப்பொருளை அதன் உடல் உற்பத்தி செய்கிறது. அப்போதுதான் அவை அச்சுறுத்தும் உயிரினங்களாக மாற்றம் பெறுகின்றன.
இதையும் படிங்க: 'திருமலை - திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல!'