இஐஏ 2020 வரைவை எதிர்த்து டெல்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இல்லத்தின் முன்பு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் இன்று (ஆகஸ்ட் 12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் பி.வி.சீனிவாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதனையடுத்து ஊடகங்களை சந்தித்து பேசிய அவர், "கோடிக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்பை பறித்துவிட்டு, மத்திய பாஜக அரசு தற்போது காற்று, நீர், நிலம் ஆகியவற்றையும் இந்திய மக்களிடமிருந்து பறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு (EIA 2020) என்ற புதிய சட்டத்தை தங்களது கார்ப்பரேட் நண்பர்களின் நலனுக்காக கொண்டுவந்துள்ளது.
அதன் மூலமாக இந்தியாவின் சுற்றுச்சூழல், பல்லுயிர், சூழலியல், பழங்குடியினரின் பாரம்பரிய நில உரிமை பறித்துள்ளது. அதுமட்டுமல்லாது, நமது வருங்கால சந்ததியினரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இயற்கை வளச்சுரண்டலுக்கு வழிவகை செய்கிறது. சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்தினால் மாசுபடுத்திய திட்ட உரிமையாளர்களிடம் இருந்து நிவாரண நிதியை பெற ஏற்பாடு செய்யும் இந்த வரைவு ஆபத்தான் அந்த திட்டம் தடை செய்யாது. இப்படி ஆயிரம் குழப்பம் நிறைந்த வரைவு அது.