உலகை உலுக்கி வரும் கரோனாவை உலுக்க இதுவரை ஒரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும், மலேரியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கரோனாவுக்கும் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவித்தது.
இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை 70 விழுக்காடு அளவிற்கு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. உலக நாடுகளில் அதிகளவில் ஹைட்ராக்சிகுளோரோகுயினை உற்பத்தி செய்வதும் இந்தியாவே. இந்நிலையில், நாட்டில் தற்போது கரோனா தீவிரமடைந்ததால், இம்மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்தது.
இதையடுத்து அமெரிக்க உள்பட பல்வேறு நாடுகளும் இந்தத் தடையைத் தளர்த்துமாறு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்தன. ஆனால் இந்தியாவோ எதற்கும் செவிசாய்க்காமல் இருந்ததையடுத்து, தடையை நீக்காவிட்டால் இந்தியா கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார்.