ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கியுள்ள மக்கள், தங்களது நேரத்தை இணையத்தில்தான் செலவிட்டு வருகின்றனர். அதன்படி, சினிமா பார்ப்பதும், கேம்ஸ் விளையாடுவதைத் தாண்டி டிஜிட்டல் கற்றலுக்கு மக்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி பள்ளிகளும், உயர் கல்வி நிறுவனங்களும் ஆன்லைன் வகுப்புகளின் முறைகளை சமீபத்தில் தொடங்கியுள்ளன.
இதற்காக ஸ்கைப், ஜூம், கூகிள் மீட், கூகுள் கிளாஸ்ரூம் போன்ற தளங்களை உபயோகிக்கின்றனர். மேலும், மாணவர்களுக்குத் தேவையான குறிப்புகள் அடங்கிய லிங்கை வாட்ஸ்அப் வழியாகவும் ஆசிரியர்கள் அனுப்புகின்றனர். மாணவர்களுக்குப் பாடத்தில் வரும் சந்தேகங்களையும் வீடியோ கால் மூலமாக தீர்த்து வைக்கின்றனர்.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "மார்ச் மாதம் முதல் தற்போது வரை ஒரு கோடிக்கு அதிகமான மக்கள் டிஜிட்டல் கல்வி கற்க அனுகியுள்ளனர். தேசிய ஆன்லைன் கல்வித் தளத்தில் SWAYAM 26 லட்சம் மக்கள் பதிவு செய்துள்ளனர். அதேபோல், தினந்தோறும் 59 ஆயிரம் பேர் ஸ்வயாம் பிரபா டி.டி.எச் தொலைக்காட்சியில் (SWAYAM Prabha DTH TV channels) வீடியோக்கள் பார்க்கிறார்கள் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இதுகுறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்ரீ ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் கூறுகையில், "இணையம் வசதியில்லாத மாணவர்களுக்காக தான் தொலைக்காட்சி மூலம் கற்றலை ஊக்குவித்துவருகிறோம். 32 டி.டி.எச் சேனல்களைக் கொண்ட ஸ்வயம் பிரபா குழு (SWAYAM PRABHA group) 24 மணி நேரமும் கல்வித் தகவல்களை ஒளிபரப்பி வருகிறது. கல்விக்கான பிரத்யேக சேனல்களைப் பார்த்து மாணவர்கள் நேரத்தை நல்வழியில் செலவிட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:கரோனா எதிர்ப்புப் போர் : கேரள அரசாங்கம் சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது!