உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் எட்டு காவலர்களைக் கொலைசெய்த வழக்கு உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி விகாஸ் துபே கடந்த ஜூலை 10ஆம் தேதி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், இவர் 22 ஆண்டுகளுக்கு முன்னதாக 1998இல் நடைபெற்ற என்கவுன்ட்டரில் நூலிழையில் உயிர் தப்பினார் என பால்ராம்பூர் நீதிமன்ற தலைமைக் காவலர் தேவேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "1998ஆம் ஆண்டில் கல்யாண்பூர் காவல் நிலையத்தில் சிறப்புக் குழுவின் காவலராக பணியாற்றினேன். அந்த சமயத்தில் அப்போதைய பாஜக தலைவர் சந்தோஷ் சுக்லா, விகாஸ் துபே குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக கான்பூருக்கு வரவுள்ளாக காவல்துறையிடம் தகவல் அளித்தார். அதனடிப்படையில் நாங்களும் அவரை பிடிப்பதற்காக காவல் நிலையத்திற்கு அருகே தடுப்புகளை வைத்து தயாராக இருந்தோம். துபே தடுப்புகளை உடைப்பார் என்று எங்களுக்குத் தெரியும். எதிர்பார்த்தபடியே அவர் தடுப்புகளை உடைத்து துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினார்.