தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து அச்சுறுத்தும் ஒன்றாக காற்று மாசு இருந்துவருகிறது. வாகனங்களிலிருந்து வரும் புகை ஒரு பக்கமிருக்க அதிகளவிலான குப்பை எரியூட்டுதல், அண்டை மாநிலங்களில் விளைச்சலுக்கு பின் எரியூட்டும் பயிர்கள் உள்ளிட்டவை காற்று மாசுபாட்டை மென்மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்களால் ஏற்படும் புகை மண்டலம் டெல்லியை சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்துவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கிறது.
டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் 275 புள்ளியைத் தொட்டுள்ளது. மேலும், அண்டை நகரங்களான காசியாபாத், நொய்டா, லோனி தெகட் உள்ளிட்ட பகுதிகள் 300 புள்ளிகளைத் தொட்டுள்ளன. காற்றின் தரக் குறியீடு அளவீட்டின்படி 201 முதல் 300 புள்ளிகள் மிக மோசமான நிலையில் உள்ளதைக் குறிக்கிறது.