உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள பவுத்தியா கிராமத்தைச் (Pauthiya village) சேர்ந்த கல்கு பிரஜாபதி (Kalku Prajapati), விவசாயம் செய்துவருகிறார். இவருக்கும் மஹோபா மாவட்டம் (Mahoba district) புனியா கிராமத்தில் (Puniya village) வசிக்கும் ரிங்கி என்ற பெண்ணுக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்த முடிவுசெய்தனர்.
அதன்படி, இவர்களின் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கரோனாவால் அமலுக்கு வந்த ஊரடங்கு கல்கு - ரிங்கியின் திருமண ஆசைக்கு முற்றுப்புள்ளிவைத்தது.
திருமணத்திற்கான அனுமதியும் காவல் நிலையத்தில் கிடைக்காத காரணத்தினால், விரக்தியடைந்த கல்கு, தனது துணையைக் கரம்பிடிக்க முடிவுசெய்தார். ஆனால், அவரிடம் இருசக்கர வாகனம் இருந்தும் ஓட்டுநர் உரிமம் இல்லாத காரணத்தினால் சைக்கிளில் புறப்பட்டார்.
கரோனாவிலிருந்து முகத்திரை அணிந்தபடியே சுமார் 100 கி.மீ. தொடர்ந்த அவரின் சைக்கிள் பயணம், ரிங்கி வீட்டு வாசலில் சென்று முடிவடைந்தது.