மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் உதவியாளராக இருப்பவர் அஷ்வின் ஷர்மா. இந்நிலையில், நேற்று திடீரென அவரது வீட்டிலும், வணிக வளாகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
சிஆர்பிஎஃப், காவல்துறை அதிகாரிகள் இடையே மோதல்!
போபால்: மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் உதவியாளர் அஷ்வின் ஷர்மா வீடு, வணிக வளாகத்தில் நடந்த வருமானவரி சோதனையின்போது சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து நகர காவல் கண்காணிப்பாளர் பூபிந்தர் சிங் கூறுகையில், ‘நாங்கள் அவர்களுக்கு எந்த விதத்திலும் இடையூறு செய்யவில்லை. இவந்த வணிக வளாகத்தில் மக்களும் குடியிருக்கின்றனர். குடியிருப்புவாசிகள் பல பேருக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படும். அதைக் கருத்தில் கொள்ளாமல், மொத்தமாக வளாகத்தை இழுத்து மூடிவிட்டு, சோதனை செய்வது எந்த விதத்தில் சரியாக இருக்கும்’ என்று கேள்வி எழுப்பினார்.
இதேபோல் மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்குமிடையே சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.