உலகளவில் கிட்டத்தட்ட ஒரு கோடியே 10 லட்சத்தும் அதிகமானோரை பாதித்துள்ள கோவிட் -19 தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது. கரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்க உலக நாடுகள், சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் (பிபிஐஎல்) உடன் இணைந்து உருவாக்கப்படும் கரோனா வைரஸ் தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்) அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், இந்த மருந்தின் சோதனைகள் இன்னும் முடியவடையாததினால், இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உலகை மிரட்டும் கரோனா வைரஸைக் குணப்படுத்தும் COVAXIN என்ற தடுப்பூசி மருந்தை, பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் (NIV) இணைந்து வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முடிந்தபின், 2020 ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் பொது சுகாதார பயன்பாட்டிற்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் (பிபிஐஎல்) தனது இலக்கை அடைவதற்கு விரைவாக செயல்பட்டுவருகிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவ சோதனை தளங்களின் ஒத்துழைப்பை பொறுத்து இறுதி முடிவு அமையும்” என்று தெரிவித்தார்.
கரோனா வைரஸிற்கு எதிராக இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கியதாக பாரத் பயோடெக் அறிவித்தது. இது ‘துரிதப்படுத்தப்பட்ட’ மனித மருத்துவ பரிசோதனைகளுக்கான இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலின் அனுமதியையும் பெற்றுள்ளது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனம் ஆகியவற்றுடன் தனது ஒத்துழைப்பை அறிவித்த 52 நாள்களுக்குள், பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் தனது விரிவான முன் மருத்துவ ஆய்வுகளை முடித்துள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் கிருஷ்ணா எலா ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "பொதுவாக 14-15 ஆண்டுகள் எடுக்கும் தடுப்பூசி இப்போது ஒரு வருடத்திற்குள் உருவாக்கப்படலாம்" என்று கூறினார். விரைவான கோவிட் -19 தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை மற்றும் சோதனை செயல்முறைகள் எவ்வாறு கவனிக்கப்படுகின்றன என்பதை அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.