வருமான வரி, தனி நபர் வரி தாக்கல், தொழில் மற்றும் தனி நபர் வரி தணிக்கை மற்றும் நிறுவனங்களின் வரி தாக்கலுக்கான தேதியை நவம்பர் 30 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதேபோல் முதலீடுகள் செய்வதற்கான வருமான வரிச் சட்டத்தின் வரி சேமிப்பு விதிகளை ஜூன் 30ஆம் தேதியிலிருந்து ஜூலை 31ஆம் தேதிக்கு நீட்டித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கரோனா சூழலில் வரி செலுத்துபவர்கள் சந்திக்கும் இடர்பாடுகளை மனதில் கொண்டு இதனை மார்ச் 30ஆம் தேதியிலிருந்து ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பே நீட்டித்திருந்தார். தற்போது மத்திய அரசு இதனை ஜூலை 31ஆம் தேதிக்கு நீட்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வரி சேமிப்பு பணிக்கான அத்தியாவசிய முதலீடுகளை செய்ய முடியாமல் தவிக்கும் வரி செலுத்துபவர்களுக்கு இதன்மூலம் முதலீடுகளை செய்ய மேலும் ஒரு மாத காலஅவகாசம் உள்ளது. இதன்மூலம் எல்ஐசி, பிபிஎப், என்பிஎஸ் உள்ளிட்டவற்றில் வரி சேமிப்பு முதலீடுகளை செய்ய முடியும் என மத்திய அரசு நம்புகிறது.
2018 -19 நிதியாண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்தாவர்கள், உண்மையான திருத்தப்பட்ட வருமான வரியை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 30 (2020) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கலின் மூன்று பிரிவுகளுக்கும் நவம்பர் 30ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்துள்ள அரசு, வரி தணிக்கைக்கான அறிக்கையை தாக்கல் செய்வதற்கு அக்டோபர் 31ஆம் தேதியே கடைசி நாள் என அறிவித்துள்ளது.
ஆதார் - பான் கார்டை இணைக்கும் தேதி நீட்டிப்பு:
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளில், ஆதார் - பான் கார்டு இணைப்புக்கான தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதார்-பான் கார்டு இணைப்புக்கான தேதி மார்ச் 31, 2021 என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுய மதிப்பீடு வரிக்கான கடைசி தேதியும் நீட்டிப்பு:
மத்திய நேரடி வரிகள் வாரியம், சுய மதிப்பீடு வரியை செலுத்த நவம்பர் 30 (2020) கடைசி தேதி என அறிவித்துள்ளது. ஆனால், சுய மதிப்பீடு வரி ரூ. 1 லட்சம் வரை உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.