கோவிட்-19 பெருந்தொற்று இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வரும் சூழலில், நோயாளிகளை விரைவில் குணப்படுத்தும் சிகிச்சை முறை, மருந்துகள் குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் நிர்வகித்து வரும் பதஞ்சலி ஆய்வு அறக்கட்டளை, தங்களின் ஆயுர்வேத மருந்துகளை கோவிட்-19 நோயாளிகள் மீது பரிசோதிக்க முன்வந்ததாகவும், இந்திய மருந்து கட்டுப்பாடு தலைமையகத்திடம் (DCGI) ஒப்புதல் இல்லாமல் அதனை இந்தூர் மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது மருத்துவ நிபுணர்கள், எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சில நாள்களுக்கு முன்பு ட்வீட் செய்திருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய் சிங், "கோவிட்-19 வழிமுறைகள் குறித்து மனீஷ் சிங்குக்கு ஒன்றுமே தெரியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதிகாரத்துக்கு அருகில் உள்ளவர்களின் பேச்சைக் கேட்டு மக்களைப் பரிசோதனை விலங்குகளாக கருத வேண்டாம் என மத்தியப் பிரதேச அரசையும், மனீஷையும் கேட்டுக்கொள்கிறேன். அந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
இந்திய மருந்து கட்டுப்பாடு தலைமையகத்திடம் (DCGI) பதஞ்சலி ஒப்புதல் பெற்றுவிட்டதா? அப்படி பெற்றிருந்தால் அவர்கள் செய்தது சட்டத்துக்குப் புறம்பானது அல்லவா? அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்தூர் மாவட்ட ஆட்சியர் மனீஷ் சிங் பேசுகையில், "அதுபோன்று எந்த அனுமதியும் அளிக்கப்படவில்லை, மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கும் சதி இது" என மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : நான் இருக்கேன்; இந்தியா - சீனா மத்தியஸ்தத்திற்கு முன்வந்த ட்ரம்ப்