தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவக் கல்வி முறையில் என்னென்ன மாற்றங்கள் தேவை? -  ரன்தீப் குழு பரிந்துரை

பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன், போதிய மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் வழங்குவதுடன், இதன் கண்காணிப்பிலும் வெளிப்படைத் தன்மை தேவை. இதனை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் நிவர்த்தி செய்யும் பட்சத்திலும், இதன் பலனாக பாதிப்புகளிலிருந்து மீளும் மக்கள், தங்களுக்கும் வாழும் உரிமை உள்ளது என்பதை உரக்க உரைப்பது நிச்சயம்

மருத்துவக் கல்வி முறையில் மாற்றங்கள் அவசியம்
மருத்துவக் கல்வி முறையில் மாற்றங்கள் அவசியம்

By

Published : Feb 24, 2020, 11:46 AM IST

உரிய நேரத்தில், முறையான மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 24 லட்சம் பேர் உயிரிழக்கும் அவலம் உள்ளது. இது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் அதிகரித்துவிட்ட மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் லட்சக்கணக்கானோர் பரிதவிக்கும் பரிதாபமும் நீடிக்கிறது. இச்சூழலில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாழும் உரிமைக்கான சட்டமும் மெல்லமெல்ல நீர்த்துப் போய்வருகிறது. இந்நிலையில்தான், நாடாளுமன்ற நிலைக்குழு மருத்துவம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டியுள்ளது.

நாடு முழுமைக்கும் மருத்துவத் துறையின் தரம், அதிலுள்ள பல்வேறு ஓட்டைகள் ஆகியவை குறித்து சுட்டிக்காட்டியுள்ள இந்தக் குழு, நாட்டின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு மருத்துவக் கல்வியின் அடிப்படை தகுதி போதுமான அளவுக்கு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அவலத்தைப் போக்க, போதிய மருத்துவர்களையும் இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களையும் உருவாக்க வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளது.

15ஆவது நிதிக் குழுவால் நியமனம் செய்யப்பட்ட, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன் தீப் குளேரியா தலைமையிலான ஆறு நபர் குழுவின் முக்கிய பரிந்துரைகள்படி, அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுமைக்கும் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்பதைப் பரிந்துரைத்துள்ளது. சுகாதாரம் என்பது இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை என்பதை உறுதிப்படுத்த, சுகாதாரச் சேவைகளை மாநிலங்களின் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

தற்போதைய எம்பிபிஎஸ் பாடத்திட்டம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள ரன்தீப் குழு, இதனை மறுபரிசீலனை செய்வதுடன் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு இடங்களுக்கு இணையாக மருத்துவ மேற்படிப்பு இடங்களையும் 2025ஆம் ஆண்டுக்குள் அதிகரிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. இதுபோன்ற சீரமைப்புகளை விரிவாக்கம் செய்ய, 2ஆம் நிலை, 3ஆம் நிலை நகரங்களில் முறையே 3 ஆயிரம், 5 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய தனியார் மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்பதையும் இக்குழு வலியுறுத்தியுள்ளது.

இப்பரிந்துரைகளின்படி, எம்பிபிஎஸ் படிப்பில் சிறப்புக் கவனம் செலுத்துவதுடன், சுகாதாரச் சேவைகளை கீழ் மட்ட அளவிலிருந்து மேம்படுத்த வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில் போதிய மருத்துவக் கல்லூரிகள் இல்லாத நிலையில், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் போதிய பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பரிந்துரைகள் மீது மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம்.

உலகின் மொத்த மக்கள்தொகையில் 17% மக்கள் வசிக்கும் நாடு நம் இந்தியா. அரசாங்க கணக்குப்படி, இந்தியாவில் பிரசவத்தின்போது இறக்கும் குழந்தைகள் விகிதம் 27% ஆகவும், 5 வயதுக்குள் இறக்கும் சிறார் மரண விகிதம் 21% ஆகவும், பிற அரிய நோய்களால் இறப்போர் விகிதம் 20% ஆகவும் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கணக்குப்படி, ஒவ்வொரு 1,000 மக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு மருத்துவர் அல்லது மருத்துவ அலுவலர் இருக்க வேண்டும் என்கிறது.

தற்போதைய சூழலில், இந்த நிலையை இந்தியா எட்ட இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். மேலும், நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் பல்வேறு சுகாதாரத் திட்டங்களும் கூட உரிய பலனளிக்கவில்லை என்பதும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்தக் குறைபாடுகளைக் களைய வேண்டுமெனில் எம்பிபிஎஸ் இடங்களுக்கு இணையாக மருத்துவ மேற்படிப்பு இடங்களை உருவாக்க வேண்டும் என்று ரன்தீப் குழு பரிந்துரைக்கிறது. ஆனால், இதனைச் செயல்படுத்த வேண்டுமெனில் கூடுதல் நிதி தேவைப்படும் என்பதால், அங்கு தான் பிரச்னையும் தொடங்குகிறது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 80 ஆயிரமாக உள்ளது. ஆனால், பட்ட மேற்படிப்பு இடங்கள் இதில் மூன்றில் ஒரு பங்கு தான். இந்நிலையில் வரும் 2021-22ஆம் கல்வியாண்டில் நாடு முழுவதும் புதிதாக 75 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் எனவும், இதில் 15,700 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுதலாக கிடைக்கும் எனவும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு அறிவித்தது.

இவ்வாறு எம்பிபிஎஸ், பட்ட மேற்படிப்பு இடங்களைக் கூடுதலாக மத்திய அரசு அனுமதிக்கும்போது, அரசு மருத்துவமனைகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு 40% கூடுதல் நிதி தேவைப்படும். இந்தக் கணக்குப்படி, தற்போதைய, முந்தைய எம்பிபிஎஸ் இடங்களுக்கு சமமான பட்ட மேற்படிப்பு இடங்களை உயர்த்தும் பட்சத்தில், அதற்கேற்ப மாநில அரசுகள் கட்டமைப்பு, மேம்பாட்டு வசதிகளுக்காக பெருந்தொகையைச் செலவிட வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகும். எம்பிபிஎஸ், பட்ட மேற்படிப்பு இடங்கள் சம அளவில் இருக்க வேண்டும் என்பதனைச் சாத்தியமாக்க வேண்டுமெனில், மாநில அரசுகள் மேலும் நிதி நெருக்கடிகளில் சிக்காமலிருக்க மத்திய அரசு தற்போதைய விதிகளில் மாற்றம் செய்வது அவசியம்.

தற்போது நாட்டில் புதிதாக தொற்றுநோய்கள் பரவும் அச்சமும் நிலவுகிறது. எனவே இந்தச் சவால்களை எதிர்கொள்ள, மருத்துவக் கல்விக்கு மட்டுமின்றி தரமான சுகாதாரச் சேவையை உறுதிசெய்ய போதிய தரமான பயிற்சிகளை வழங்கவும் மத்திய அரசு திட்டங்கள் வகுக்க வேண்டும். பிரிட்டனில், சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியிருந்தாலும் சரி அல்லது பணக்காரர்களாக இருந்தாலும் சரி தேசிய சுகாதாரச் சேவை (NHP) என்ற, குடிமக்கள் அனைவருக்கும் மருத்துவச் சேவை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது.

இதேபோல் ஜெர்மனியோ, நாட்டின் மொத்த ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு குடிமக்களுக்கு, கட்டாய சமூக காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. இதில் சுவிட்சர்லாந்துதான் தனது நாட்டுப் பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் தேவையான அனைத்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகளையும் சுகாதார வசதிகளையும் செய்து கொடுக்கிறது. சீனா, இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகளும் சர்வதேச தரத்திலான சுகாதாரத் திட்டங்களில் முன்னணி வகிக்கின்றன. உலகளவில், மருத்துவம், சுகாதாரத் தேவைகளுக்காக ஒவ்வொருவரும் சொந்தமாகச் செலவிடும் தொகை சராசரியாக 18 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவிலோ, உடல் நலன் பேண ஒவ்வொருவரும் செலவிடுவது 63% என்ற உச்ச அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் அந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 10% அளவு நிதியை, தங்கள் நாட்டு பிரஜைகளின் மருத்துவ, சுகாதாரத் தேவைகளுக்கு ஒதுக்கீடு செய்கின்றன. இதனால் இந்த நாடுகள் பொதுச் சுகாதாரத் துறையில் சிறந்து விளங்குகின்றன. ஆனால் இந்தியாவிலோ, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.5 சதவீதத்தை மட்டுமே பொதுச் சுகாதாரத்திற்கு ஒதுக்குவதால், பெரும்பாலான மக்கள் மருத்துவ வசதிக்கு திண்டாட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதிலும், உத்தரப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் மாநில அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) திருப்திகரமாக இல்லாத நிலையில் உள்ளன. இதுபோன்ற சூழலில், 2025ஆம் ஆண்டுக்குள் தேசியளவில் பொதுச் சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்யும் அளவு, நாட்டின் ஒட்டுமொத்த நாட்டு உற்பத்தியில் 2.5% அளவுக்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும், அதில் மூன்றில் இரண்டு பங்கு அடிப்படை மருத்துவச் சிகிச்சைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதையும் ரன்தீப் குழு கூறியுள்ளது.

தற்போது செயல்பாட்டிலுள்ள ஸ்வாஸ்த் (SWASTH) சுகாதாரச் சேவை திட்டத்தின் செயல்பாடு, தரத்தின் அடிப்படையில் பார்த்தாலும் சர்வதேச அளவில் நம் நிலை இன்னும் பரிதாபமாகவே உள்ளது. இதில், 195 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா 145ஆவது இடத்தில் உள்ளது. எனவே பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை என்பதால் இத்துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு என்பது அவசியமாகிறது.

அதேபோல் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன், போதிய மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் வழங்குவதுடன், இதன் கண்காணிப்பிலும் வெளிப்படைத் தன்மை தேவை. இதனை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் நிவர்த்தி செய்யும் பட்சத்திலும், இதன் பலனாக பாதிப்புகளிலிருந்து மீளும் மக்கள், தங்களுக்கும் வாழும் உரிமை உள்ளது என்பதை உரக்க உரைப்பது நிச்சயம்...!

ABOUT THE AUTHOR

...view details