நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டுத் தொடரில் நேற்று (செப்.17) வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, பண்ணை சேவை, அத்தியாவசியப் பொருள்கள் மசோதா ஆகியவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், "விவசாயிகள் தொடர்பான இரண்டு மசோதாக்களை பாஜக தலைமையிலான அரசு நேற்று மக்களவையில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப், ஹரியானாவிலுள்ள விவசாயிகள் சாலையில் இறங்கிப் போராடி வருகின்றனர். இது மக்களுக்கும் ஆளும் அரசாங்கத்திற்கும் உள்ள இடைவெளியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
இந்த மசோதாக்கள் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்புத் தூணையே கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த மசோதாக்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை, பொதுக் கொள்முதல், பொது விநியோக முறையை கொண்டுவர உதவும் எனக் கூறினாலும், இவை நடைமுறைப்படுத்தப்பட்டால் விவசாயிகள் அதிகபட்ச ஆதரவு விலையைவிடக் குறைந்த விலைகளை நிர்ணயிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவர்.