ஒருங்கிணைந்த ஆந்திராவிலிருந்து ஹைதராபாத்துடன் சேர்ந்த ஒரு பகுதி பிரிக்கப்பட்டு தெலங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி என்ற பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பகுதியை தலைநகராக்கும் பணிகள் நடைபெற்றுவந்தன.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழந்தார். தொடர்ந்து முதலமைச்சராகப் பதவியேற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்துக்கு மூன்று தலைநகர்களை அறிவித்தார். அதன்படி அமராவதி சட்டப்பேரவைத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும், கடற்கரை நகரமான விசாகப்பட்டினம் நிர்வாக மற்றும் இதர முக்கியத் தலைநகராகவும் அறிவித்தார்.
ஜெகன் மோகன் அரசின் இத்திட்டத்துக்கு தெலுங்கு தேசம் கட்சியினரும் விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்தை தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கல்லா ஜெயதேவ் மக்களவையில் எழுப்பினார். இதற்குப் பதிலளித்த உள்துறை விவகாரங்கள் துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “ஒவ்வொரு மாநிலமும் அதன் மாநில எல்லைக்குள் வரையறைகளை வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.