கோவிட்-19 பெருந்தொற்று நோய், புற்றுநோயாளிகளையும், உடல் பலவீனமானவர்களையும் எளிதாக தாக்க வாய்ப்புள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் தலைமையிலான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மருத்துவக் கல்லூரி இந்த ஆய்வை நடத்தியது. ஆய்வு தொடர்பான தகவல்கள், புற்றுநோய் கண்டறிதல் (Cancer Discovery) இதழில் வெளியாகியுள்ளது. ஆய்வில், “கோவிட்-19 பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள புற்று நோயாளிகளுக்கான விளைவுகளை மதிப்பிடுவதில், கரோனா வைரஸ் மிகப்பெரிய ஆபத்தானது” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து ஆய்வின் துணை தலைவரும், முன்னணி எழுத்தாளருமான விகாஸ் மேத்தா கூறுகையில், “எங்கள் கண்டுபிடிப்புகள் புற்று நோயாளிகளை கோவிட்-19 பாதிப்பிலிருந்து தடுப்பதற்கான அவசியத்தை வலியுறுத்துகின்றன. புற்றுநோயாளிகள் கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து, தங்களை பாதுகாக்க மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருத்தல் வேண்டும்.
ஒருவேளை புற்றுநோயாளிகள் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டால் அவர்களை அடையாளம் கண்டு, தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். கோவிட்-19 பாதிப்பால், புற்றுநோயாளிகள் சில தனித்துவமான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். ஆகவே, எங்களது கண்டுபிடிப்புகள் இதுவரை பாதிக்கப்படாத நகரங்களிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் பெரும் உதவியாக இருக்கும்” என்றார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மான்டிஃபியோர் மருத்துவ மையத்தில், மார்ச் 18ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடந்த மற்றொரு ஆய்வில், “கோவிட்-19 பாதித்த 218 புற்றுநோய் நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் 61 புற்றுநோயாளிகள் இறந்துவிட்டனர்.
இது மிகப்பெரிய அளவிலான கோவிட்-19 இறப்புவிகிதம் (28 விழுக்காடு) ஆகும். இதுகுறித்த தனது கவலையை வெளிப்படுத்திய ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியின் இணை மூத்த எழுத்தாளர் பாலாஸ் ஹால்மோஸ், “புற்றுநோய்க்கான சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு கோவிட்-19 மிக நெருக்கமாக காணப்படுகிறது.
ஆகவே புற்றுநோயாளிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். புற்றுநோயாளிகள் சந்திக்கும் இணை நோயாக கோவிட்-19 பெருந்தொற்று உள்ளது” என்றார்.
ஆய்வின் மற்றொரு இணை மூத்த ஆசிரியர் அமித் வர்மா, “கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும், புற்றுநோயாளிகள் "உயிர் காக்கும் புற்றுநோய் சிகிச்சைகளை நிறுத்தக்கூடாது. மாறாக, சாத்தியமான கோவிட்-19 வெளிப்பாடுகளைக் குறைப்பதற்கான உத்திகளை கையாளலாம். உதாரணமாக, மிகவும் பாதிக்கப்படக்கூடிய புற்றுநோய் மக்களுக்கான சிகிச்சைகளை மறுமதிப்பீடு செய்யலாம்” என்று விளக்கினார்.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, புற்றுநோயாளிகள் கரோனா வைரஸ் தொற்றினால் எளிதில் பாதிக்கக்கூடும். ஆகவே, பிரத்யேக நோய் அறிகுறி இல்லையென்றாலும், மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில், மான்டிஃபியோர் மற்றும் நியூயார்க் நகரம் முழுவதும் புற்றுநோய் அல்லாத நோயாளிகளின் இறப்பு விகிதங்களுடன் ஒப்பிடும்போது, புற்றுநோய் நோயாளிகள் கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து இறக்கும் அபாயத்தை கணிசமாக வெளிப்படுத்தியுள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு குழுவாக, லுகேமியா மற்றும் லிம்போமா போன்ற ஹீமாடோலோஜிக் (ரத்த) புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளுக்கு 37 விழுக்காடு (54 நோயாளிகளில் 20) மிக அதிகமான இறப்பு விகிதம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். திடமான குறைபாடுள்ள நோயாளிகளுக்கு, இறப்பு விகிதம் 25 விழுக்காடு (164 இல் 41) என்று அவர்கள் கூறினர்.
ஆய்வில் குறிப்பிட்ட திட புற்றுநோய்களிடையே சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 55 விழுக்காடு ஆகவும், பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இது 38 விழுக்காடு ஆகவும், மார்பக புற்றுநோய் இறப்பு விகிதங்கள் 14 விழுக்காடு ஆகவும், புரோஸ்டேட் புற்றுநோய்க்கு 20 விழுக்காடு ஆகவும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இதுமட்டுமன்றி, ஆய்வின்படி, வயதான, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் போன்ற பிரச்னைகளால் அவதியுறுபவர்கள் கோவிட்-19 தொற்றினால் குறிப்பிடத்தக்க அளவினால் பாதிக்கப்படலாம். இதுதவிர ஆய்வில் வேறு சில முன்மாதிரியான தகவல்களும் கிடைத்துள்ளது.
புற்றுநோயுடன் கரோனா வைரஸ் பாதிப்பால் இறந்த 61 நோயாளிகளில், 37 பேர் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேலாக நர்சிங் ஹோம் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் ஆவார்கள். தற்போதுள்ள சுகாதார நெருக்கடி காரணமாக, இந்த இடங்களில் தற்போது அதிகப்படியான ஆபத்து நெருக்கடி உள்ளது. இந்த இடங்கள் கோவிட்-19 ஆபத்து மிகுந்த இடங்களாக அறியப்படுகிறது.
கோவிட்-19 பாதிப்பிலிருந்து புற்றுநோயாளிகள் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள, தனிநபர் தகுந்த இடைவெளி அவசியம். இதனை நடைமுறைப்படுத்துவது மூலம், கோவிட்-19 பரவலைத் தடுக்கலாம். மேலும் இறப்பு விகிதம் அதிகரிக்கும்பட்சத்தில், சோதனையையும் நாம் அதிகரிக்க வேண்டும். இதனை ஒப்புக்கொள்ளும் ஆய்வாளர்கள், தொற்றுநோயைப் பரவலாக கண்டறிவதும் அவசியம் என்று வலியுறுத்துகின்றனர்.
மேலும் தரவுகளை பயன்படுத்தி புற்றுநோயாளிகளை காக்க, செயல்திறன் மிக்க உத்திகளின் அவசியத்தையும் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அமெரிக்காவில் கோவிட்-19 பெருந்தொற்று இறப்பு விகிதம் 5.8 விழுக்காடு ஆக இருக்கிறது உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவிட்-19 வெளிப்படைதன்மைக்கு எஸ்டோனியா அழுத்தம் கொடுக்கும்!