சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து, கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு சிலர் ஆதரவையும் பலர் எதிர்ப்பையும் தெரிவித்தனர். இதையடுத்து சபரிமலைக்குள் நுழைய பெண்கள் பலர் முயற்சித்த போதெல்லாம், ஐயப்ப பக்தர்கள் பலர் அவர்களுக்கு அனுமதி அளிக்க மறுத்தனர். இதனால் அம்மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
தீர்ப்பு வந்து எட்டே மாதங்களில் கடந்த மார்ச் 10ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. அங்கு இடதுசாரிகளின் ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி என, மும்முனைப் போட்டி நிலவுகிறது. சபரிமலை விவகாரத்தை கையில் எடுத்து இடதுசாரிகளின் கோட்டையில் கால் பதிக்க துடித்தது பாஜக.
இதனிடையே, 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.