பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக மாநில அரசியல் கட்சிகளும் எதிர்க்கட்சித் தலைவர்களும் மாநிலத்தின் மேம்பாடுகள், கரோனா வைரஸ் பரவலைக் கையாளுதல், வெள்ளம், வேலைவாய்ப்பு, இன்ன பிற காரணிகள் குறித்து அனல் பறக்கும் விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில், மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், மாநிலத்தில் உள்ள பிகார் பூர்வீக மக்களுக்கு 90 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரியுள்ளார். கரோனா வைரஸைக் கையாளுதல், வடக்கு பிகாரில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக லோக்சக்தி ஜான் கட்சி (எல்ஜேபி) தலைவர் சிராக் சாவான், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் மாநில முதலமைச்சருமான நிதீஷ் குமார் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மேலும், பிகாரில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் சட்டப்பேரவை உறுப்பினர்களின் சொத்து விபரம், குற்றவியல் பின்னணி ஆகியவற்றைத் தொகுத்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதில், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கட்சியைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மீது அதிகபட்ச குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் (பிஜேபி) உள்ளன.