இந்தியப் பெருங்கடலில் உருவான ஃபோனி புயல், வங்காள விரிகுடா வழியாகச் சென்று ஆந்திராவின் சில கடலோரப் பகுதிகளையும், ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வர், புரி உள்ளிட்ட நகரங்களையும் புரட்டிப் போட்டுள்ளது.
இதில் ஒடிசாவில் முக்கிய ரயில் நிலையங்கள், செல்போன் கோபுரங்கள், மின் கோபுரங்கள் உள்ளிட்டவை பெரும் சேதத்திற்கு உள்ளாகின.
மேலும் பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 11 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களிலும், முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டதால் அதிக உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஃபோனி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒடிசாவிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டு வரும் நிலையில், அதனைக் கொண்டு செல்வதற்குக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்து ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.