புதுடில்லி: 2019ஆம் ஆண்டில் இந்திய சிறைகளில் உள்ள கைதிகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு கைதிக்கு ரூ.118 செலவழித்தபோதும், 69.05 விழுக்காடு சிறைக்கைதிகள் இன்னும் விசாரணைக்காக காத்திருக்கிறார்கள் என்று சர்வதேச மனித உரிமை அமைப்பின் புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
சமீபத்திய இந்திய சிறைச்சாலை புள்ளிவிவரம் 2019இன் அடிப்படையில், காமன்வெல்த் மனித உரிமைகள் முயற்சி (CHRI), சிறை கைதிகளின் எண்ணிக்கை மற்றும் இருப்பிடம், விசாரணை கைதிகளின் விகிதம், விசாரணை கைதிகள் சிறைவாச காலம், பெண்கள்(கைதிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட), கல்வி, கைதிகளின் சாதி மற்றும் மதம் பற்றிய விவரங்கள், சிறை ஊழியர்கள், குற்றம் வாரியாக சிறைக்கைதிகள், சிறை ஆய்வுகள், கைதிகளுக்கான செலவு மற்றும் சிறைகளில் இறப்பு போன்ற 10 அளவீடுகளை பகுப்பாய்வு செய்தது
2019இல் இந்தியாவின் சிறைச்சாலைகளின் நிலை குறித்த CHRI பகுப்பாய்வு, பின்வரும் 10 உண்மைகளை எடுத்துக்காட்டுகிறது:
- சிறையில் 4.78 லட்சம் கைதிகள் இருந்தனர், கைதிகளின் நெரிசல் விகிதம் 18.5 சதவீதமாக இருந்தது.
- சிறைகளில் அடைக்கப்பட்ட 18.8 லட்சம் கைதிகளில் பெண்கள் 4.3 விழுக்காடாக இருந்தனர்.
- 19,913 பெண்கள் கைதிகளில் 1,543 பெண்கள் 1,779 குழந்தைகளுடன் இருந்தனர்.
- இந்தியாவில் 69.05 விழுக்காடு கைதிகள் விசாரணைக்கு காத்திருக்கிறார்கள், அவர்களில் நான்கில் ஒரு பங்கு நபர்கள் ஏற்கனவே ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் உள்ளனர்.
- 116 கைதிகள் தற்கொலை செய்து கொண்டனர், 7,394 கைதிகள் மனநோயால் பாதிக்கப்பட்டனர்.
- சிறையில் இருந்த 5,608 வெளிநாட்டு கைதிகளில் 832 பேர் பெண்கள்.
- சிறையில் இறந்த 1,775 கைதிகளில் 1,544 பேர் நோய் மற்றும் வயது மூப்பு காரணமாக இறந்தனர்.
- 30 விழுக்காட்டிற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருந்தன. மொத்த சிறை ஊழியர்களில் பெண்கள் 12.8 விழுக்காடு மட்டுமே.
- சிறை ஊழியர் மற்றும் கைதிகளின் விகிதம் 7: 1 ஆகவும், கைதிகள் மற்றும் சீர்திருத்தும் ஊழியர்கள் விகிதம் 628: 1 ஆகவும், மருத்துவ ஊழியர் மற்றும் கைதிகள் விகிதம்243: 1 ஆகவும் இருந்தது.
- சிறைச்சாலைகள் ஒவ்வொரு நாளும் ஒரு கைதிக்கு சராசரியாக ரூ. 118 ரூபாய் செலவழித்தது.
CHRI அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டில், நாட்டின் ஒட்டுமொத்த சிறைகைதிகளின் விகிதம் 118.5 விழுக்காடாக இருந்தது, இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக அதிகமாகும்.
சிறைச்சாலைகளில் கைதிகளில் எண்ணிக்கையை பொறுத்தவரை, மாவட்ட சிறைச்சாலைகள் மற்றும் மத்திய சிறைச்சாலைகள் முறையே 129.7 விழுக்காடு மற்றும் 123.9 விழுக்காடாக இருந்தன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், டெல்லியில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது 174.9 விழுக்காடாக உள்ளது.
எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், அதாவது டெல்லி (174.9 விழுக்காடு), உத்தரபிரதேசம் (167.9 விழுக்காடு), உத்தரகண்ட் (159 விழுக்காடு), மேகாலயா (157.4 விழுக்காடு), மத்தியப் பிரதேசம் (155.3 விழுக்காடு), சிக்கிம் (153.8 விழுக்காடு), மகாராஷ்டிரா (152.7 விழுக்காடு), சத்தீஸ்கர் (150.1 விழுக்காடு) ஆகியவை 150 சதவீதத்திற்கு மேல் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் வீதத்தைக் கொண்டுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில், சிறைச்சாலை வசதியில் 10.1 விழுக்காடு அதிகரிப்புக்கு எதிராக மொத்த சிறைக்கைதிகள் தொகை 14.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டுகளில், விசாரணை கைதிகளின் எண்ணிக்கை 17.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2019ஆம் ஆண்டின் இறுதியில், நாட்டின் 1350 சிறைகளில் இருந்த 4,78,600 கைதிகளில் 3,30,487 பேர் விசாரணை கைதிகளாக இருந்தனர்.
சிறைக்கைதிகளின் உலக எண்ணிக்கை 2015 முதல் 2018 வரை 3.7 விழுக்காடு அதிகரித்துள்ளது (உலகின் சிறை கைதிகளின் எண்ணிக்கை 2019இன் தரவு கிடைக்கவில்லை) என்று CHRI அறிக்கை தெரிவித்துள்ளது.