மார்ச் மாதம் டெல்லியில் நடந்த சமய மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களைக் கண்டறிந்து அரசு தனிமைப்படுத்தியது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 600 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த 600 பேருக்கும் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து அம்மாநில கூடுதல் உள்துறைச் செயலர் அவனீஸ் அவஸ்தி பேசுகையில், ''டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட அனைவருக்கும் தனிமைப்படுத்தல் காலம் முடிவுக்கு வந்துள்ளது. இவர்கள் அனைவரும் விதிகளை மீறி பயணம் செய்ததற்காகவும், பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தியதற்காகவும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் பிணை வாங்கிய பின்னரே, அனைவரும் விடுவிக்கப்படுவர்'' என்றார்.
இதற்கிடையே சமாஜ்வாதி எம்எல்ஏ ரஃபீக் அன்சாரி, ''டெல்லி சமய மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அதிக நாள்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீரட்டில் 296 பேர் 50 நாள்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்'' எனக் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து சிறப்பி மருத்துவ அலுவலர் ராஜ் குமார் பேசுகையில், ''நோயாளிகள் அனைவரும் அதிகபட்சமாக 28 நாள்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களை விடுவிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் தான் வழிகாட்டுதல்களைக் கொடுத்துள்ளது. அவர்கள் எந்தப் பகுதிகளுக்கு பயணம் சென்றுள்ளனர் என்ற விவரங்களை அறிவதற்காக அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கலாம்'' என்றார்.
இதையும் படிங்க:இஸ்லாமியர் என நினைத்து தாக்கிவிட்டனர் - சர்ச்சை கருத்தால் சஸ்பெண்டான காவலர்!