இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்குத் தனிமைப்படுத்தப்பட்டு வார்டுகளில் அவர்களுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.
இருப்பினும் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பாதுகாப்புக் கருவிகள் முறையாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்துவருகின்றன.
இந்நிலையில், மும்பை பகுதியிலுள்ள ஜாஸ்லோக் மருத்துவமனையில் 31 செவிலியர், 5 மருத்துவர்கள் என மொத்தம் 36 பேருக்கு கோவிட்-19 தொற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்து ஜாஸ்லோக் மருத்துவமனை சார்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இது குறித்து மும்பை மாநகர சுகாதாரத் துறையிடம் தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, தங்களுக்கு இது சம்பந்தமாக எந்தவொரு தகவலும் இதுவரை வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக மும்பையில் வேறு சில மருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 29 விழுக்காடு கோவிட் தொற்று சமய மாநாட்டுடன் தொடர்புடையது