கரோனாவினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தைப் புரட்டிப் போட்டுள்ளது. உணவுப் பற்றாக்குறையால், அகதிகள் போல மக்கள் எல்லைகளைக் கடக்கத் தொடங்கினர். அதில் ஒரு குழுவில்தான், சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஜாம்லோ மக்தாமும், தனது பயணத்தைத் தொடங்கினார்.
தெலங்கானா மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில் மிளகாய் வயல்களில் பணிபுரிந்த ஜாம்லோ, கரோனா அச்சத்தில் சொந்த ஊர் திரும்ப முடிவு செய்து, தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் கொண்ட குழுவுடன் ஏப்ரல் 15ஆம் தேதி நடைபயணத்தைத் தொடங்கினார்.
நெடுஞ்சாலையிலிருக்கும், கெடுபிடிகளைத் தவிர்க்க அக்குழுவினர் காடுகள் வழியாகவே நடந்துசென்றனர். ஊரடங்கு ஏற்படுத்திய உணவுப் பற்றாக்குறை, சிறுமியை வாட்டிவதைத்தது. ஆனாலும், குழந்தைகளுக்கே உண்டான குதூகலத்துடன் வீட்டை நோக்கி நடந்தார். சுமார் 150 கி.மீ. கடந்த ஜாம்லோவால் அதற்குமேல் நடக்க முடியவில்லை.