தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 23, 2021, 10:55 PM IST

ETV Bharat / bharat

பெங்களூரு வெடி விபத்து: உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்!

பெங்களூருவில் உள்ள குடோன் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை ஐந்து பேர் காயமடைந்துள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என சாமராஜ்பேட்டை எம்.எல்.ஏ அறிவித்துள்ளார்

பெங்களூரு வெடி விபத்து, Bengaluru blast
பெங்களூரு வெடி விபத்து

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை அருகே ஸ்ரீ பத்திரகாளியம்மன் லாரி சர்விஸ் குடோன் இயங்கி வந்தது. இந்த கட்டடத்தில் இன்று (செப். 23) மதியம் 12 மணியளவில் வெடி விபத்து ஒன்று நிகழ்ந்தது.

இந்த விபத்தில் இதுவரை ஐந்து பேர் படுகாயம் அடைந்தள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வெடி விபத்தின் தாக்கம் குடோனில் இருந்து 100 மீட்டர் தூரம்வரை உணரப்பட்டுள்ளது. மேலும், குடோனை சுற்றியிருந்த சில கடைகள், இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஏழு வீடுகள் உள்ளிட்டவை கடுமையான சேதத்திற்கு உள்ளாக்கியுள்ளன.

உயிரிழந்த தொழிலாளர்கள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விவி புரம் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைவில் அங்கிருந்த தீயைக் கட்டுப்படுத்தினர். உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

மேலும், அந்த குடோனில் பணிபுரியும் மனோகர் (டாடா ஏஸ் ஓட்டுநர்), குடோன் அருகே பஞ்சர் கடை நடத்தும் அஸ்லாம் பாட்ஷா ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து ஏற்பட்ட இடத்திற்கு வந்த சாம்ராஜ்பேட்டை எம்எல்ஏ ஜமீர் அகமது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு பட்டாசுகள் காரணமா?

விபத்து நடைபெற்ற குடோனில், பட்டாசுகள் நிறைந்த 77 பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியும் 15 முதல் 20 கிலோ வரை எடைகொண்டது. அந்த பெட்டிகளில் இரண்டு பெட்டிகள் வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு வெடி விபத்து

குடோன் உரிமையாளர் பாபு, இந்தப் பட்டாசுகளை தமிழ்நாட்டில் இருந்து வாங்கி, அந்த பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்துவந்துள்ளார். உரிமையாளர் பாபு மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவான பாபுவை வலைவீசி தேடி வருகின்றனர்.

பலமுனைகளில் விசாரணை

இதுகுறித்து, துணை காவல் ஆணையர் ஹரீஷ் பாண்டே கூறுகையில், " விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை. முதற்கட்ட விசாரணையில், பெட்ரோலிய பொருள்களால் விபத்து ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. எரிபொருள் சார்ந்த பொருள்கள், கம்பிரஸ்சர் போன்றவை எதுவும் விபத்து நடந்த இடத்தில் தென்படவில்லை. ஆனால், விபத்து நடந்த இடத்தை பார்க்கும்போது ரசாயன பொருள்கள் ஏற்பட்ட விபத்து போன்றுள்ளது" என்றார்.

பின்னர், தடய அறிவியல் பரிசோதனை குழுவினர் சம்பவ இடத்தில் விபத்து குறித்த உண்மை அறியும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். விவி புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்து குறித்த பலமுனைகளில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோன்று, நேற்று முன்தினம் (செப். 21) பெங்களூருவில் உள்ள தேவரசிக்கனஹள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சமையல் எரிவாயு கசிவின் காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், இரண்டு பேர் நெருப்பில் உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: ரோடு இருந்தா மட்டும் தான் கல்யாணம் - பெண்ணின் குரலுக்கு செவிமடுத்த அரசு

ABOUT THE AUTHOR

...view details