ஐதராபாத் :பிரான்ஸ் தேசிய தினம் அல்லது பாஸ்டில் தின ராணுவ அணிவகுப்பு ஜூலை 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மிடுக்குடன் கூடிய ராணுவ அணிவகுப்புக்கு புகழ் பெற்ற இந்த அணிவகுப்பின் போது, இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்த முறை பாஸ்டில் தின அணிவகுப்பில் இந்திய ராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்திய ராணுவத்தின் முப்படைகளைச் சேர்ந்த 269 பேர் கொண்ட வீரர்கள் குழு இந்த பாஸ்டில் தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். மேலும், இந்த நிகழ்வில் இந்திய விமானப் படையின் மூன்று ரபேல் போர் விமானங்கள், பிரான்ஸ் போர் விமானங்களுடன் இணைந்து பறக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வரலாற்றில் பல்வேறு புரட்சிகள் எழுதப்பட்டு இருந்தாலும், அதற்கெல்லாம் அடித்தளமிட பிரான்ஸ் புரட்சி அமைந்தது என்று கூறினால் அதற்கு மிகையல்ல. மன்னராட்சி மற்றும் கத்தோலிக் திருச்சபையிடம் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களை மீட்டு ஜனநாயக ஆட்சிக்கு வித்திட்டதாக இந்த பிரெஞ்சுப் புரட்சி கூறப்படுகிறது.
கம்யூனிச நாடுகளான சீனா மற்றும் ரஷ்யாவில் கூட பிரான்ஸ் புரட்சி தாக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நூற்றாண்டு காலமாக மன்னாரட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பிரான்சில் மக்கள் புரட்சி வெடித்து பாஸ்டில் கோட்டை மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட பாஸ்டில் சிறை தகர்க்கப்பட்ட தினம் பாஸ்டில் அல்லது பிரான்ஸ் தேசிய தினமாக கண்டறியப்படுகிறது.
1789 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி பிரான்ஸ் மன்னர் 16ஆம் லூயிசின் அடக்குமுறைக்கு எதிராக ஒன்று திரண்ட பாரீஸ் மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டு பிரான்ஸ் மன்னரின் ஆயுதக் கிடங்கை கைப்பற்றிய மக்கள் அணிவகுப்பு நடத்தினர். இதில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் அதனால் கொதித்தெழுந்த மக்கள் பாஸ்டில் கோட்டையை தகர்ந்து நூற்றுக்கணக்கான சிறைக் கைதிகளை விடுதலை செய்தனர்.
இதன் நினைவாக ஆண்டுதோறும் பாஸ்டில் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் காலப்போக்கில் பாஸ்டில் நினைவு தின கொண்டாட்டம் நீர்த்து போகத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதன்பின் மூன்றாம் பிரான்ஸ் குடியரசை ஆண்ட தலைவர்கள் மீண்டும் பாஸ்டில் நினைவு தினத்தை கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்தனர்.
1880ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பாஸ்டில் தின கொண்டாட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. மேலும் ஜூலை 14ஆம் தேதி பிரான்சின் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
1870ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை தேசபக்தி மற்றும் ராணுவத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கம் விதமாக பாஸ்டில் தினம் கொண்டாடப்பட்டது. பிரான்சில் உள்ள ஒவ்வொரு நகராட்சி அல்லது வட்டங்களில் அதனதன் விருப்பத்திற்கு ஏற்ப கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
ஜூலை 13 ஆம் தேதி மாலை ஜோதி ஊர்வலத்துடன் தொடங்கும் அணிவகுப்பு மறுநாள் காலை, தேவாலய மணிகள் அல்லது துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்புடன் நிறைவு பெற்று வந்தன. அதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு உணவு, விளையாட்டு, நடனம் மற்றும் கண்கவர் வாணவேடிக்கைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.
1914 - 1918 முதலாம் உலகப் போருக்கு பின்னர் மீண்டும், 1919 ஜூலை 14 ஆம் தேதி முதல் பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜூலை 14ஆம் தேதி பாரீஸ் நகரில் உள்ள பாஸ்டில் கோட்டை நினைவு பகுதியில் வீரர்கள் அணிவகுப்புடன் ஆண்டுதோறும் பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
முதல் முறையாக 1971ஆம் ஆண்டு பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் பெண் ராணுவ வீராங்கனைகள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு, பிரான்ஸ் - ஜெர்மன் நாடுகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தை குறிக்கும் வகையில் யூரோகார்ப்ஸ் எனப்படும் ஐரோப்பிய படைகளில் பணிபுரிந்த ஜெர்மன் நாட்டு வீரர்கள் பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
அதேபோல் 2007 ஆம் ஆண்டு, முதல் முறையாக, 27 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். 2009 ஆம் ஆண்டு பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் கலந்து கொள்ள இந்திய ராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையைச் சேர்ந்த 400 வீரர்களை கொண்ட குழு ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்டது.
அதைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு, 14 ஆப்பிரிக்க நாடுகள் தங்களது சுதந்திரத்தின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிரானஸ் தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதை செய்தன. 2007, 2008 மற்றும் 2009 ஆண்டுகளில், அணிவகுப்பை தொடர்ந்து பாரீசில் உள்ள எலிசி பூங்காவில் பாரம்பரிய வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ராணுவ வீரர்கள், பல்துறை கலைஞர்கள், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 2010ஆம் ஆண்டு பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியின் காரணமாக இந்த வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நூற்றாண்டுகளை கடந்து பிரஞ்சு புரட்சியின் நினைவாக பிரான்ஸ் தேசிய தினம் ஜூலை 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க :பிரதமர் மோடி பாரீஸ் பயணம்! பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கிறார்!