தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"அவள் இறந்துவிட்டாள், இந்தியா வர அவளுக்கு உரிமை இல்லை" - அஞ்சுவின் தந்தை வேதனை!

கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை கைவிட்டு, பாகிஸ்தான் சென்ற ராஜஸ்தான் பெண் அஞ்சு காதலனை மணம் முடித்த நிலையில், தங்களைப் பொறுத்தவரை அஞ்சு இறந்துவிட்டதாகவும், இந்தியாவுக்கு வர அவருக்கு உரிமை இல்லை என்றும் அஞ்சுவின் தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Pakistani friend
அஞ்சு

By

Published : Jul 27, 2023, 2:41 PM IST

ராஜஸ்தான்:உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அஞ்சு(34) என்ற பெண்மணி, திருமணமாகி ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள தனது கணவர் வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில், இவருக்கு முகநூல் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா(29) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அஞ்சு ஜெய்ப்பூர் செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு, தனது காதலனைப் பார்க்க பாகிஸ்தான் சென்றுள்ளார். உரிய ஆவணங்களுடன் முறையாக விசா எடுத்து அஞ்சு பாகிஸ்தான் சென்றுள்ளார். இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலானபோதுதான், அவரது குடும்பத்தினருக்கும் இதுபற்றி தெரியவந்துள்ளது. அஞ்சு பாகிஸ்தான் சென்றதை அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். அதேநேரம், தான் பாகிஸ்தான் சென்றது குறித்து தனது குடும்பத்தினரிடம் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கோரி அஞ்சு வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, அஞ்சு இஸ்லாம் மதத்திற்கு மாறி, காதலன் நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொண்டார். தனது பெயரை பாத்திமா என்றும் மாற்றிக் கொண்டார். இதையடுத்து, இருவரும் பாகிஸ்தானில் சுற்றுலா சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின. இது அஞ்சுவின் குடும்பத்திற்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அஞ்சுவின் தந்தை கயா பிரசாத் தாமஸ், "எங்களைப் பொறுத்தவரை அஞ்சு இறந்துவிட்டாள். இந்தியாவுக்கு திரும்பி வர அவளுக்கு உரிமை இல்லை. ஒருவேளை அவர் திரும்பி வந்தால், கடுமையான தண்டனை கிடைக்கும். அவள் செய்தது மிகவும் தவறு. அவள் செய்த காரியத்திற்காக நான் வெட்கப்படுகிறேன், இந்திய அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்கிறேன். குழந்தைகளை அழைத்துச் செல்ல அவளுக்கு எந்த உரிமையும் இல்லை.

அவளது செயலால் எங்களுக்கு அவப்பெயர் வந்துவிட்டது. அவளுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவள் இந்தியாவை விட்டு வெளியேறியபோதே அவளுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துவிட்டோம். என் மகள் இப்படி செய்வாள் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை" என்று கூறினார்.

இதுகுறித்து அஞ்சுவின் கணவர் கூறும்போது, "அன்று இரவு எனக்கு ஒரு வாய்ஸ் கால் வந்தது. நான் லாகூரில் இருக்கிறேன் என்று அஞ்சு கூறினாள். அவள் ஏன் லாகூர் சென்றாள்? - விசா உள்ளிட்ட பிற விஷயங்கள் எல்லாம் எப்படி கிடைத்தது? என்று எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவள் இரண்டு மூன்று நாட்களுக்குள் திரும்பி வருவேன் என்று என்னிடம் கூறினாள்" என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். தற்போதுவரை இது காதல் விவகாரம் என்ற நிலையிலேயே இருக்கிறது என்றும், போலி ஆவணங்கள் மூலம் பாகிஸ்தான் சென்றிருந்தால் அஞ்சு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: முகநூல் காதலனை சந்திக்க பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்மணி - வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details