ஆந்திரா:தாயைப் பிரிந்து கிராமத்திற்குள் புகுந்த 4 புலிக் குட்டிகளை மீண்டும் தாய் புலியுடன் சேர்க்க போலீசார், வனத்துறையினர் என ஏறத்தாழ 300 பேர் தொடர்ந்து போராடி வருகின்றனர். நந்தியால் மாவட்டம் ஆத்மகுரு வனப்பகுதிக்கு உட்பட்ட கும்மாடபுரம் கிராம பகுதியில் கடந்த 7 ஆம் தேதி நான்கு புலிக் குட்டிகளைக் கிராம மக்கள் கண்டெடுத்தனர்.
தாயை பிரிந்து புலிக் குட்டிகள் தனியாக வந்திருக்கக் கூடும் என எண்ணிய கிராம மக்கள், புலிக் குட்டிகளை உணவு வழங்கி பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தாயைப் பிரிந்து புலிக் குட்டிகள் கிராமத்திற்குள் வந்த தகவலை வனத் துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். புலிக் குட்டிகள் குறித்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்த வனத் துறை அதிகாரிகள், கிராம மக்களிடம் இருந்த 4 பெண் குட்டி புலிகளை மீட்டனர்.
அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் புலிக் குட்டிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன. தொடர்ந்து புலிக் குட்டிகளைத் தாய் புலியுடன் சேர்க்கும் நடவடிக்கையில் வனத் துறையினர் ஈடுபட்டனர். குட்டிகளைத் தொலைத்த விரக்தியில் தாய் புலி கடும் கோபத்தில் இருக்கும் என்பதால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
ஆனால், ஏறத்தாழ 72 மணி நேரத்தை கடந்தும் தாய் புலி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் நந்தியால் - கர்னூல் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் தாய் புலியை தேடி வருகின்றனர். இந்நிலையில் தாய் புலியை கண்டுபிடிக்க போலீசார், வனத் துறையினர் உள்பட 300 பேர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.