வரும் ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் 45 வயதைக் கடந்தவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தத் தகுதியுடைவர்கள் அனைவரும் உடனடியாகப் பதிவுசெய்ய தொடங்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாம் டோஸை நான்காவது வாரம் முதல் எட்டாவது வாரத்திற்கான இடைப்பட்ட காலத்தில் செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
முன்னதாக டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 60 வயதைக் கடந்தவர்கள், 45 வயதைக் கடந்த இணை நோயாளிகளுக்கு தற்போது கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. நேற்றைய நிலவரப்படி, இதுவரை நான்கு கோடியே 84 லட்சத்து 94 ஆயிரத்து 594 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வார காலமாக நாட்டில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்தும்விதமாக மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:கோவிட்-19 நிலவரம்: ஒரேநாளில் 40,715 பேருக்குப் பாதிப்பு