டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. டெல்லி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இன்று(அக்.28) காலை நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீட்டு எண் 400-500 என்ற அளவில் மிகவும் மோசமாக இருந்தது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அளித்த தகவலின்படி அலிபூர், ஷாதிபூர், என்எஸ்ஐடி துவாரகா, சிரிஃபோர்ட், ஆர்கே புரம், பஞ்சாபி பாக், நேரு நகர், துவாரகா செக்டார் 8, பட்பர்கஞ்ச், அசோக் விஹார், நரேலா, வாசிர்பூர், பவானா, முண்ட்கா பகுதிகளில் காற்று மாசு அளவு மிகவும் மோசமாக உள்ளது.
இப்பகுதிகளில் காற்றின் தரக்குறியீட்டு எண் 300 - 400 என்ற அளவில் இருந்தது. குறிப்பாக, காசியாபாத்தில் காற்றின் தரம் மிக மிக மோசமான நிலையில் இருந்ததாகவும், அங்கு காற்றின் தரக்குறியீட்டு எண் 405ஆக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.