புதுச்சேரியில் கடந்த மாதம் ஒரு பெற்றோர் வறுமையின் காரணமாக, தங்களின் ஐந்து பெண் குழுந்தைகளை பணத்துக்கு அதே பகுதியிலுள்ள ஒரு பண்ணைக்கு வேலைக்கு அனுப்பிவைத்தனர். பண்ணைக்கு வேலைக்குச் சென்ற அந்தச் சிறுமிகள் கொத்தடிமைகளாக இருப்பதாக புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவினருக்கு புகார் வந்தது.
அதையடுத்து அங்கு விரைந்த குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுவினர் கொத்தடிமைகளாக இருந்த இரண்டு சிறுமிகளையும், அவர்கள் அளித்த தகவலின்படி மற்ற மூன்று சிறுமிகளையும் மீட்டு 'உதவும் கரங்கள்' குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சிறுமிகளைக் கொத்தடிமைகளாக வைத்திருந்ததுடன், அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது.
சிறுமிகள் வேலை செய்யும் பண்ணையின் உரிமையாளர், அவரின் மகன், உறவினர்கள் என சுமார் 5 பேர் சிறுமிகளைத் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்துவந்திருக்கின்றனர். இது தொடர்பாக ஐந்து பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.