பாட்னா : பீகாரில் இடி மின்னல் தாக்கி 24 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் மோசமான வானிலை மற்றும் இயற்கை பேரிடர் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 24 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், இடி மின்னல் தாக்கி இதுவரை 9 பேர் மட்டுமே உயிரிழந்து இருப்பதாக மாநில நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ரோடாஸ் மாவட்டம் சாசாரம் நகரில் மின்னல் தாக்கி 5 பேரும், அர்வல் மாவட்டத்தில் நான்கு பேர் மின்னல் தாக்கி உயிரிழந்து இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மாநிலத்தில் இயற்கை பேரிடர் காரணமாக பாட்னா, ரோடாஸ், அர்வால், முசாபர்பூர், நாலந்தா, அவுரங்கபாத், வைசாலி உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்படைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ரோஹ்தாஸ் மற்றும் அர்வால் ஆகிய இடங்களில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்ததை தவிர, சாப்ராவில் மின்னல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் அவுரங்காபாத் மற்றும் கிழக்கு சம்பரானில் 2 பேரும், கைமூர், சீதாமர்ஹி, முசாபர்பூர், பாட்னா, வைஷாலி நாளந்தா, அராரியா, கிஷன்கஞ்ச், பாங்கா மற்றும் சிவான் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளன.