மத்தியப் பிரதேச மாநிலம் மண்டாசூரில் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக சோஹைல் (21) என்பவர் காவல் துறையினரின் காவலில் சித்ரவதை செய்யப்பட்டு, மண்டாசூரில் உள்ள மருத்துவமனையில் உயிரழந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சோஹைலின் குடும்பத்தினர் கூறுகையில், “சோஹைலை காவல் துறையினர் காவலில் எடுத்து 50 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனச் சித்ரவதை செய்தனர். காவலர்கள்தான் சோஹைலை கொலைசெய்துள்ளனர்” எனத் தெரிவித்தனர்.
சோஹைலின் சகோதரர் முரத் இது குறித்துப் பேசுகையில், “அவரை (சோஹைல்) கைதுசெய்த பிறகு, காவலர் ஒருவர் 50 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டார். அன்றைய நாளே எனது சகோதரன் கொல்லப்பட்டார். அவரது உடலில் சித்ரவதைக்குள்ளானதிற்கான அடையாளங்கள் உள்ளன” எனக் குறிப்பிட்டார்.
இது குறித்து மண்டாசூர் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் சௌத்ரி, “அந்த நபர் 90 கிராம் போதைப்பொருளைக் கடத்தியதற்காகக் கைதுசெய்யப்பட்டார். அந்த நபர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கீழே விழுந்தார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.