புல்வாமா (ஜம்மூ-காஷ்மீர்):ஜம்மூ-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 27) பயங்கரவாத அமைப்பினருக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.
இன்றும் (ஏப்ரல் 28) இரு தரப்பினருக்கும் இடையே தாக்குதல் தொடர்ந்த நிலையில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் இருவரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த அஜீஸ் ஹசீஃப் மற்றும் சாகித் ஆயுப் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகள் இந்த மாதத்தில் காஷ்மீரில் தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காஷ்மீர் ஐஜிபி விஜயகுமார் கூறுகையில், "மேலும் இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். கூடிய விரைவில் அவர்களும் பிடிபடுவர்" என்றார்.
சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து இரண்டு ஏகே 47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தாக்குதல் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மக்களின் வெளியேற்றத்திற்கு பிறகு தாக்குதல் தொடரும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க:40 ஆண்டுகளாக மசூதியில் வழிபாடு நடத்தும் இந்து மக்கள்