தருமபுரி:தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் என தினந்தோறும் 2000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் காவலர்கள் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் காவலர் ஒருவர் தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஹோட்டலில் உணவு சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு சாப்பிடும் உணவிற்கு கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு மீதியை பின்பு தருகிறேன் என கோரிவிட்டு சென்று விடுவார் என கூறப்படுகிறது.
இதேபோன்று நேற்று சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்காமல் பிறகு தருவதாக கூறி உள்ளார். அதேபோல் இன்று மாலையும் உணவு சாப்பிட்டுவிட்டு சென்றபோது கடை உரிமையாளர் வீரமணியின் மகன் முத்தமிழ் என்பவர் நேற்று சாப்பிட்ட உணவிற்கும் சேர்த்து பணம் கேட்டு உள்ளார். இதனால் கோபமடைந்த போலீசார், முத்தமிழை தகாத வார்த்தையில் பேசியுள்ளார். மேலும் பணத்தை தூக்கி வீசிவிட்டு கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது.