விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேவுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சியில் தொடக்கப்பள்ளி இயங்கிவருகிறது. கடந்தாண்டு கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்குப் பாடங்கள் அரசு இணைய வழியாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் நடத்தப்பட்டுவருகின்றன.
இந்தக் கிராமத்தில் அனைவரும் கூலி வேலை செய்துவருவதால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கித் தர இயலாத சூழலில் இருந்தனர். இதனையறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் கே. ஜெயக்குமார் ஞானராஜ், தனது சொந்த செலவில் முதல் வகுப்பு சேரும் அனைத்து மாணவர்களுக்கும் செல்போன் வாங்கிக்கொடுத்தார்.
அதேபோல், இந்தாண்டு மாணவர் சேர்க்கைத் தொடங்கிய முதல் நாளிலிருந்து பள்ளியில் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கிவருகிறார்.
இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் மாணவர்களுக்குத் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவில் அனைத்து வசதிகளும் உள்ளன. சிறப்பாக பாடம் கற்றுத் தரப்படுகிறது. மேலும், தற்போதுள்ள கரோனா அச்சம் சூழ்நிலையில், இணையதளம் வாயிலாகப் பாடம் கற்றுத் தரப்படுகிறது.
செல்போன் வாங்க இயலாத நிலையில், தலைமை ஆசிரியர் கடந்தாண்டு தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு செல்போன்கள் வாங்கிக்கொடுத்தார். இந்தாண்டு, அரசுப் பள்ளியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கிவருகிறார்” எனத் தெரிவித்தனர்.
இந்தத் தலைமை ஆசிரியரின் இச்செயல் கிராம மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் தலைமை ஆசிரியர் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கக்கூடிய நல் ஆசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கிய இசை ஆசிரியர்