விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளுக்கு எதிராக மாவட்ட காவல் துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் அருகேயுள்ள நரையூர் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (60) என்பவரிடம் பணம் பறிக்கும் நோக்கில் கடந்த 6ஆம் தேதி கொலை மிரட்டல் விடுத்த அதே ஊரைச் சேர்ந்த வேலு, அவரது கூட்டாளிகள் மீது வளவனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வேலுவை கைதுசெய்ய சென்ற உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினரை அவர் தாக்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தமைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் பரிந்துரையின்படியும், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின்பேரிலும் வேலு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் இதுநாள் வரையில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட ஆறு குற்றவாளிகள், 17 தொடர் குற்றவாளிகள், மணல் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள், தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் மீது தலா ஓராண்டு தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்துள்ளது. எனவே மேற்கண்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...'பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் நிலை?' - பதில் சொல்ல மறுத்த அமைச்சர்!