மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரவகுறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையின் போது கோட்சேவை இந்து தீவிரவாதி என பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனையடுத்து தமிழ்நாட்டில் இந்துத்துவ கட்சிகளால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்திய அளவில் கமல்ஹாசன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, நரேந்திர மோடியும் கருத்து தெரிவித்தார். இந்நிலையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் காமராஜரின் 117ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள கமலஹாசன் அழைக்கப்பட்டார். இந்த சூழலில், கமல்ஹாசன் வருகையை எதிர்த்து விஜய பாரத மக்கள் கட்சியினர் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.