வேலூர்: குடியாத்தம் அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர், பரத்பாண்டி (28). இவர், விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று ( மே11 ) அவர் வழக்கம்போல தனது விவசாய நிலத்திற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் விவசாய நிலத்தின் வழியாக, தனது விவசாய நிலத்திற்கு பரத்பாண்டி செல்லும்பொழுது அறுந்து விழுந்திருந்த மின் கம்பியை மிதித்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மின் கம்பியை மிதித்து பரத்பாண்டி உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் குடியாத்தம் காவல் துறையினர் மற்றும் மின்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த விவசாயின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி பரத்பாண்டியின் கண் மற்றும் உடல் உறுப்புகள் ஆகியவற்றைத் தானம் செய்வதாகப் பெற்றோர் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கும்பகோணத்தில் நூதன முறையில் ரூ.8 லட்சம் நகை திருட்டு.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு