திருச்சி: மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருவதால், எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இம்மருத்துவமனையின் மேல் தளத்தில், அறுவை சிகிச்சை கூடம் உள்ளிட்டப் பல்வேறு அறைகள் உள்ளன.
இந்நிலையில், இன்று (ஏப். 20) காலை, அறுவை சிகிச்சை அரங்கிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர் துர்நாற்றம் வீசும் அறுவை சிகிச்சை அரங்கிற்கு நேரில் சென்று பார்த்தபோது, சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் இருந்ததைக் கண்டுள்ளனர்.
பல கோணங்களில் விசாரணை: இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சடலமாக கிடக்கும் பெண் யார், அவர் எப்போது மருத்துவமனைக்கு வந்தார், அவருடன் யார் வந்தனர், அவர் எப்படி இறந்தார், இத்தனை நாள் அவரது சடலம் மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கில் கிடந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மருத்துவத்துறை சார்பில், மருத்துவமனை அறுவை சிகிச்சை கூடத்தில் ஒரு பெண் சடலமாக கிடப்பது தெரியாமல் அழுகி போய் துர்நாற்றம் வீசும் அளவிற்கு இத்தனை நாட்கள் கிடந்தது எப்படி, யார் இதற்கு பொறுப்பு என்பது குறித்தும், இவ்வாறு மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் அலட்சியமாக இருந்தது குறித்தும், விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: காவல் நிலையத்தில் விசாரணை கைதி சந்தேக மரணம்: சென்னை காவல்துறை விளக்கம்