தற்காலிக பொறியாளர்கள் 104 பேருக்கு விதிமீறி பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று வேளாண் பொறியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பொறியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் சிவசண்முகம் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"வேளாண்மை பொறியியல் துறையில் 800 பொறியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். மழைநீர் சேகரிப்புத் திட்டம் செயல்படுத்துவது, கால்வாய்களுக்கு கான்கிரீட் தளம் அமைத்தல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை இந்தப் பொறியாளர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
வேளாண் துறையின் கீழ்வரும் இந்தத் துறையில் 1998ஆம் ஆண்டு 104 தற்காலிக உதவி பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் 2012ஆம் ஆண்டு பணிவரன்முறை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த 104 உதவி பொறியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில் அவர்கள் பணிவரன்முறை செய்யப்பட்ட 2012ஆம் ஆண்டு முதல்தான் சீனியாரிட்டி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் அவர்கள் தற்காலிகமாக நியமனம்செய்யப்பட்ட 1998ஆம் ஆண்டுமுதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பதவி உயர்விற்காக காத்திருக்கும் 200 பொறியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
மேலும் தற்காலிக பொறியாளர்கள் தமிழ்நாடு தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்படவில்லை. அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவுறுத்தியிருந்தது.
அதேபோல் நீதிமன்றமும் இதுபோன்ற உத்தரவுகளைத்தான் பிறப்பித்திருந்தது. ஆனால் இந்த உத்தரவுகளை மீறி அவர்களை 2012ஆம் ஆண்டு சீனியாரிட்டி கொண்டு பதவி உயர்வு அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதனால் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு 2012ஆம் ஆண்டுமுதல் சீனியாரிட்டி கொண்டு பதவி உயர்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 20ஆம் தேதிமுதல் 24ஆம் தேதிவரை கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இதன்பின்னரும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டி முடிவுசெய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை