புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் இன்டர்நேஷனல் பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்றுவரும் 11 வயதேயான திமோத்தி பால் என்ற மாணவன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த நூலைத் தயாரித்துள்ளார். 'ஏ பிரீடீன் ஸ்பீச் ஆன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி' என்று அந்த நூலுக்கு அவர் தலைப்பிட்டுள்ளார்.
இதில் 14 அறிவியல் பிரிவுகளில், 45 தலைப்புகளின் கீழ் கட்டுரைகளை அவர் வெளியிட்டுள்ளார். இதில் வானியல், விண்வெளி, அணு அறிவியல், வெப்ப இயக்கவியல், நவீன இயற்பியல், கணினி அறிவியல் சார்ந்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 212 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் 68 மேற்கோள் காட்டுதலும், 91 புகைப்படங்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இடம் பெற்றுள்ளன.
இந்தச் சிறுவன் தனது எட்டாவது வயதில் 'இன் பிரண்ட் ரன்' என்ற யூ-ட்யூப் சேனலைத் தொடங்கி நடத்திவருகிறார். இதில் இதுவரை 60 காணொலிகளைப் பதிவேற்றியுள்ளார். பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளில் கலந்துகொண்டு மழலையர் பள்ளிமுதல் ஐந்தாம் வகுப்புவரை 75 பதக்கங்களையும், கோப்பைகளையும் வென்றுள்ளார். இதில் 65 பரிசுகள் முதல் பரிசு என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி தனியார் உணவகத்தில் நேற்று நடைபெற்ற திமோத்தி பால் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் இந்திய மேலாண்மை நிறுவன இயக்குநர் பிம்மராய மெட்ரி நூலை வெளியிட்டார். முதல் பிரதியை புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் பள்ளி தலைவர் சோனதன் ஜெயபரதன் பெற்றுக்கொண்டார்.
பின்னர் இது குறித்து சிறுவன் திமோதி பால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "யூ-ட்யூப் சேனல் மூலம் நான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அதன் மூலமாகத்தான் இந்தப் புத்தகத்தை தயாரித்து வெளியிட்டுள்ளேன். அதனால் அனைத்து மாணவ மாணவிகளும் இதுபோன்ற நல்ல விஷயங்களை யூ-ட்யூப் சேனலில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: மறுதேர்தல் நடத்தக்கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு