திருச்சி: புதுக்கோட்டை மாவட்ட காவல் துறைக்கு, சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தடுப்பு வளையங்கள் உள்ளிட்ட சாதனங்களை வழங்கியது. இதனை காவல் துறையிடம் வழங்கும் விழா மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில், கரோனா விழிப்புணர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்காக 25 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு, இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழாவும் இன்று (மே.11) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு, இருசக்கர வாகனங்களை காவல் உதவி ஆய்வாளர்களுக்கு வழங்கினார்.
பின்னர் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா செய்தியாளர்களிடம் கூறுகையில், ' திருச்சி சரகத்தில் முதல்கட்டத்தில் 85% காவலர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இரண்டாவது கட்ட நிலையில் 45 விழுக்காடு பேர், இரண்டாவது கட்டமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இரு வாரத்திற்குள் காவலர்கள் அனைவருக்கும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் பணி முடிக்கப்படும். முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.
பொது மக்களிடம் அதிக விழிப்புணர்வு தற்போது ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் திருச்சி சரகத்தில் குறையத் தொடங்கியுள்ளது. பெண்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருப்பதற்கு, நாம் அதிக தூரம் செல்ல வேண்டியுள்ளது.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், பெண்கள் ஒவ்வொரு விதமான பயிற்சிகளை வீட்டில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். காவலர்கள் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். பழங்கால உணவுமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பாட்டி சாப்பாட்டு முறை என்று கூறுவார்களே அந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்' என்று கூறினார்.
இதையும் படிங்க: கடன் பிரச்னை: மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை!