திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வேதியியல் துறை ஆராய்ச்சி மாணவர் ஜீவா. ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த இவர், கேட் தேர்வில் அகில இந்திய அளவில் 76ஆவது இடம்பிடித்தார். நெட் தேர்விலும் தேர்ச்சிப் பெற்றுள்ளார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி வேதியியல் படித்த இவரை, பேராசிரியர் தியாகராஜன் என்பவர் ஆராய்ச்சி மாணவராகத் தன்னிடம் படிக்குமாறு கேட்டுள்ளார்.
இதனையடுத்து அவரிடம் ஜீவா ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்துள்ளார். இந்நிலையில், ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளவிடாமல் பேராசிரியரின், சொந்த வேலைகளைச் செய்ய கட்டாயப்படுத்துவதாகவும், மறுப்பு தெரிவித்ததால், தன்னை ஆராய்ச்சிப் படிப்பைவிட்டு நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் மாணவர் ஜீவா குற்றஞ்சாட்டியுள்ளார்.
உதவித்தொகையைத் தராமல் நிலுவையில் வைத்ததாகவும், ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள உபகரணம், வேதியியல் பொருள்கள் தராமல் பேராசிரியர் புறக்கணித்ததாகவும் மாணவர் ஜீவா வேதனை தெரிவித்தார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர், இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்த நிலையில், சிண்டிகேட் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை தீர்வு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர் ஜீவா பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை முன்பு அமர்ந்து உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: உதவித்தொகை வழங்க லஞ்சம் கேட்டதால் முதியவர்கள் திருவோடு ஏந்தி போராட்டம்!