அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். பல்வேறு அரசு மருத்துவமனைகளில் மருத்துவராகப் பணிபுரிந்து ஓய்வுப் பெற்றவராவார்.
கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அவர், வியாபாரத்திற்காக அவ்வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
தொடர்ந்து கடன் பெறுவதற்குரிய ஆவணங்களோடு அலைந்து வந்ததாக அறியமுடிகிறது.
இந்நிலையில், நேற்று மீண்டும் வங்கிக்குச் சென்ற மருத்துவர் பாலசுப்ரமணியம், வங்கியின் மேலாளர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் நாராயண் காம்ப்ளே என்பவரிடம் கடன் நிலை குறித்துக் கேட்டுள்ளார்.
அப்போது இந்தி மொழியில் வங்கி மேலாளர் பேசியுள்ளார். அதற்கு பதிலளித்த மருத்துவர் பாலசுப்ரமணியம், 'எனக்கு இந்தி தெரியாது' என ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.
மருத்துவர் மீண்டும் தனது ஆவணங்களைக் காண்பித்து, கடன் வழங்கும் நிலை குறித்து கேட்டபோதும் வங்கி மேலாளர் திரும்பத்திரும்ப மொழி குறித்து பேசி வீண்வாதம் செய்துள்ளார். அத்துடன், மருத்துவருக்கு வங்கிக் கடன் அளிக்க மேலாளர் மறுத்துவிட்டார்.
வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல் கடன் கொடுக்க இயலாது என தெரிவித்து தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய வங்கி மேலாளருக்கு எதிராக மான நஷ்டஈடு கேட்டு மருத்துவர் பாலசுப்ரமணியன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்தி மொழி தெரியாது என ஒரே காரணத்தை காட்டி ஐ.ஓ.பி வங்கி மேலாளர் கடன் தர மறுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், " ஜெயங்கொண்டத்தில் வாழும் ஓய்வு பெற்ற மருத்துவர் பாலசுப்பிரமணியன், உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டுச் சென்ற போது, ‘இந்தி தெரியாத உங்களுக்குக் கடன் தரமுடியாது’ என்று ஆணவத்துடன் கூறியிருக்கிறார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் வட இந்திய அலுவலர்.
இந்தி மொழி வெறி எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா? பா.ஜ.க. அரசின் பின்புலம் இதற்குக் காரணமா?
எதுவாக இருந்தாலும் தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்! சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உண்டு; எச்சரிக்கை" என தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.
இந்தி மொழி சர்ச்சைக்கு காரணமான வங்கி மேலாளர் விஷால் நாராயண் காம்ப்ளேவை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.