திருப்பூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் பகுதியிலிருந்து கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.
இதனிடையே இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி திருப்பூரிலிருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்க எண்ணியிருந்தனர். அதற்காக திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாலை முதல் பேருந்துக்காகக் காத்திருந்தனர்.
5 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் பேருந்துகள் வராத காரணத்தால் புதிய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உழைக்கும் மக்கள் முகத்தில் பொன் சிரிப்பை காண முடிகிறது - வைகோ