திருப்பூர் மாவட்டம், அவிநாசி சாலை, காந்திநகர் ஏ.வி.பி. லேஅவுட் பகுதியில், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (நீட்ஸ்) கீழ் கடனுதவி பெற்று இயங்கும் தொழில் நிறுவனத்தினை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி வேலை வாய்ப்பினை உருவாக்கி தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்திடும் வகையில், தமிழக அரசால் யு.ஒய்.இ.ஜி.பி., (வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்), பி.எம்.இ.ஜி.பி. (பிரதமமந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்) மற்றும் நீட்ஸ் (புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம்) என்ற மூன்று திட்டங்கள் மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டங்களில் முதன்மை திட்டமாக, புதிய தலைமுறை தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசால் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் (நீட்ஸ்) என்ற சிறப்பு திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் 25மூ சதவிகித மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.30.00 லட்சம் மானியம் வரை) ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை முதலீட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்க வங்கிக் கடனுதவிகள் வழங்கப்படுகிறது.
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 6 வருடங்களாக இத்திட்டத்தின் மூலம் 257 பயனாளிகளுக்கு ரூ. 43.90 கோடி மானியத்துடன் ரூ. 225.92 கோடி முதலீட்டில் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட்டு, இந்நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் மூலம் 3,416 நபர்களுக்கு நேரடியாகவும், சுமார் 5,000 நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிதியாண்டிலும் இத்திட்ட செயலாக்கத்தில் திருப்பூர் மாவட்டம் தமிழ்நாட்டில் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், துணை இயக்குநர் திருமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி மற்றும் கடனுதவி வழங்கிய வங்கி மேலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.