திருப்பூர் மாவட்டம், பூமலூர் கிராமத்தில் முதிய சகோதரிகள் இருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன சமயத்தில், அவர்களது பிள்ளைகள் பணம் ஏதாவது வைத்துள்ளார்களா?, எனக் கேட்க தங்களது இறுதிக் காலத் தேவைக்காக பணம் வைத்திருப்பதாகக் கூறி அவர்களிடம் இருந்த ரூ.46 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர் .
ஆனால், அதில் ஒரு ரூபாய் கூட செலவிட முடியாத பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக இருந்துள்ளது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது அறியாமலேயே மூதாட்டிகள் இதுவரை இருந்து வந்துள்ளனர். பின்னர் தாங்கள் வைத்திருப்பது பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் என்பதையறிந்த இரு மூதாட்டிகளும் தங்களுடைய இறுதிக் காலத் தேவைக்காக பல்வேறு வேலைகளுக்குச் சென்று சிறுகச்சிறுக சேமித்த பணம் இப்படி செல்லாமல் ஆகிவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.
இதுபற்றி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கருத்தில் கொண்ட ஆட்சியர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று அவர்களுக்கு உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஆட்சியர் விஜய கார்த்திகேயன் பணமதிப்பிழப்பு செய்தது தெரியாமல் வைத்திருந்த ரூ.46 ஆயிரம் ரூபாய் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மூலம் மாற்றமுடியாது என தெரிவித்தார்.
மேலும் அவர், மூதாட்டிகளின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை அரசு சார்பில் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இரு மூதாட்டிகளுக்கும் அரசு சார்பில் மாதாமாதம் முதியோர் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உலகிலேயே அதிக வயதான மூதாட்டி மரணம்!