திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழ்நாடு ஆந்திர எல்லைப்பகுதியான பாரதி நகர் பகுதியில் அம்பலூர் காவல் உதவி ஆய்வாளர் நாகபுஷ்பம் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்ததில் வாணியம்பாடியிலிருந்து ஆந்திராவுக்கு மினி வேன் மூலம் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல் துறையினர் ஓட்டுநர் சஞ்சய் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில் தும்பேரி பாரதி நகர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும் , கிளை செயலாளருமான வேலு என்பவருக்கு சொந்தமான மினி வேன் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் தமிழ்நாடு ஆந்திர எல்லைப் பகுதியிலிருந்து ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு தொடர்ந்து கடத்தப்படுவது வாடிக்கையாகி வருவதால் மினி வேன் ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட 4 டன் ரேஷன் அரிசியை வாணியம்பாடியில் உள்ள தமிழ்நாடு குடிமைப் பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி கடத்தப்பட்ட மினிவேன் உரிமையாளர் திமுக கிளை செயலாளர் வேலுவை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.