தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ஏசுவடியான் மகன் பாக்கியமுத்து (57). இவர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி அன்னிபெசன்ட் (55). இந்தத் தம்பதிக்கு வினோதா (24) என்ற மகளும் ஜோன் (23) என்ற மகனும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகவில்லை.
பாக்கியமுத்துவிற்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கடந்த ஓராண்டாக இருவரும் பேசிக் கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு வேலை முடிந்துவந்த பாக்கியமுத்து மனைவியிடம் பேச முயன்றுள்ளார். ஆனால், அவரின் மனைவி 'உங்களுடன் எந்த உறவும் இல்லை' என்று கூறிவிட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த பாக்கியமுத்து தனது மனைவியின் தலையில் கட்டையால் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அன்னிபெசன்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த தாளமுத்துநகர் காவல் துறையினர் அன்னிபெசன்ட்டின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து, பாக்கியமுத்துவை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.