தூத்துக்குடியில் கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்துப் பேசினார். அதில் அவர் கூறியதாவது, “பொள்ளாச்சியில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகள், கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்களைத் தமிழக அரசு மூடி மறைக்கப் பார்க்கிறது. இது மக்களுக்குப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றம் பாலியல் தொடர்பான வழக்குகளில் தெளிவான ஒரு கருத்தைக் கூறி இருக்கிறது. அதாவது, பாலியல் தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையோ அல்லது அவரை அடையாளம் காட்டும்படியான விவரங்களை வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் அதையும் மீறி பொள்ளாச்சியில் பாலியல் வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்களை எடப்பாடி அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இது, பாலியல் வன்முறை வழக்கில் இனி ஒருவரும் முன்வந்து புகார் அளிக்கக்கூடாது என்று அவர்களை அச்சுறுத்தும் விதமாக உள்ளது. அது போல கடந்த 7 ஆண்டுகளாக இந்த கொடுமை நடந்து வருகிறது என்ற தகவல் வெளிவந்திருக்கும் நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு உள்ளனர். எனவே இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்.
பாலியல் வன்முறை விசாரணையில் இதுவரை எந்த ஒரு பெண் அதிகாரியும் நியமிக்கப்படவில்லை என்பது பல கேள்விகளை எழுப்புகிறது. பிரதமர் மோடி பாஜக கட்சியின் முக்கிய நபர் ஆவார். எனவே அவர் வலிமையானவர் என்று அவருடைய கட்சியினர் கூறத்தான் செய்வார்கள். இதில் நான் எந்த கருத்தும் கூறுவதற்கு இல்லை.
பொள்ளாச்சியில் இளம் பெண்களின் மீதான பாலியல் வன்முறைச் சம்பவத்தைத் தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜனின் அணுகுமுறை சரியாக இருக்காது என்பதனை நான் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளேன். எனவே தனி நீதிமன்ற விசாரணை என்பது மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி கைப்பற்றப்படும் பணம் குறித்த விசாரணை விரிவாக நடைபெற வேண்டும். ஏனெனில் கடந்த தேர்தலின் போதே கண்டெய்னர், கண்டெய்னராக பணம் கொண்டு செல்லப்பட்டு கை மாற்றப்பட்டது. ஆகவே தற்போது பிடிபடும் பணத்திற்கான மூலத்தினை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.